கழுதை (உருவகக் கதை)


ANTHAPPAARVAI

கழுதை


முனுசாமி, என்று ஒரு சலவைத் தொழிலாளி வாழ்ந்து வந்தார்…

தினமும் ஊருக்கருகில் இருக்கும் குலத்திற்கு சென்று துணிகளை துவைத்து வருவது அவரது வாடிக்கையான செயல். ஆரம்ப காலத்தில் அவர் கழுதையில் சென்றுதான் துணிகளைத் துவைத்து வந்தார், தனது தொழில் சிறப்பு காரணமாக அதிக லாபம் சம்பாதித்து நாளடைவில் ஒரு இரண்டு சக்கர வாகனம் வாங்கினார், அதன் பிறகு அவர் கழுதையில் செல்வதைத் தவிர்த்து விட்டார். ஆனாலும், தனது வளர்ச்சிக்கு அந்தக் கழுதை தான் காரணம் என்பதால் அதை தனது வீட்டிலேயே கட்டி வைத்து வளர்த்து வந்தார். அந்த ஊரில் திருட்டுப் பயம் அதிகம் இருந்ததால், தன்னிடம் சலவைக்காக வந்துள்ள விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை யாராவது திருட வரலாம் என்பதற்காக, அதை அறிந்து கொள்வதற்காக அவர் வீட்டில் ஒரு நாயையும் வளர்த்து வந்தார்.

அவர் நினைத்தது போலவே ஒரு நாள் வீட்டிற்குள் திருடர்கள் நுழைந்து விட்டனர்…. முனுசாமியோ அசந்து தூங்கிக் கொண்டு இருந்தார், ஆனால் அவர் வளர்த்து வந்த நன்றியுள்ள நாய் குலைத்து திருடர்களை காட்டிக் கொடுத்து விட்டது. உடனே முனுசாமி விழித்து எழுந்து வந்தார், அவரைப் பார்த்ததும் திருடர்கள் தலை தெறிக்க ஓடி விட்டனர். முனுசாமி தனது நாயைப் பார்த்து பெருமைப் பட்டார், நாய் பாசத்தோடு அவரைப் பார்த்து வாலாட்டியது. பிறகு அதற்காக வாங்கி வைத்திருந்த பிஸ்கெட்களில் கொஞ்சம் அதிகமாகவே எடுத்துவந்து போட்டு, நாயை தடவிக் கொடுத்து விட்டு சென்றார். இதை எல்லாம் அசை போட்டுக் கொண்டே கழுதை பார்த்துக் கொண்டிருந்தது…!

நாட்கள் கடந்தன ….

ஒருநாள், ஒரு திருமண வீட்டுத் துணிகளைத் துவைத்த களைப்போடு அசந்து தூங்கினார் முனுசாமி…. அதே திருடர்கள் மீண்டும் வந்தனர்…. ஆனால் வந்தவர்கள் உடனடியாக நாய்க்கு மயக்க மருந்து தடவிய பிஸ்கெட்டை போட்டு விடுகின்றனர், நாயும் குலைக்காமல் அந்தப் பிஸ்கெட்டை சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு வாலாட்டியது. சிறிது நேரத்தில் நாய் மயங்கியது… அதுவரை மறைந்திருந்து காத்திருந்தவர்கள் தைரியமாக உள்ளே நுழைந்தனர். அப்போது… அவர்கள் சற்றும் எதிர் பார்க்காத நிலையில் அங்கிருந்த “கழுதை” கத்தத் தொடங்கியது…. திருடர்கள் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது தடுமாறினார்கள். கழுதையின் சத்தம் கேட்டதும் முனுசாமி எழுந்து வந்து பார்க்கிறார்…. யாரையும் காணவில்லை. நாயைப் பார்கிறார் அது தூங்கிக் கொண்டு இருக்கிறது… பிறகு சென்று தூங்கத் தொடங்கினார்.
அதன் பிறகு அந்தத்திருடர்கள் மீண்டும் உள்ளே நுழைய முயற்சிக்க… மீண்டும் கழுதை கத்தியது… முனுசாமி வருகிறார்…. சுற்றும் முற்றும் பார்க்கிறார்… கழுதையின் மேல் சிறிய கோபத்தோடு, மீண்டும் சென்று தூங்கினார். திருடர்கள் மீண்டும் உள்ளே நுழைய முயற்சிக்க… மீண்டும் கழுதை கத்தியது… முனுசாமி வருகிறார்…. சுற்றும் முற்றும் பார்க்கிறார்… அவருக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. பக்கத்தில் இருந்த ஒரு பெரிய தடியை எடுத்து, தன் ஆத்திரம் தீரும் வரை அந்தக் கழுதையை அடித்தார்…

” கழுதை! உனக்கு இப்ப என்ன வந்துச்சு… காலையில இருந்து துணி வெளுத்துட்டு, இப்பதான் அசந்து தூங்கப் போனேன், ஏன் இப்படி கத்தி உயிரை வாங்குறே?
உனக்கு சும்மா வச்சி சாப்பாடு போடுறது தப்புதானே?… நாளைக்கே உன்னை யார்கிட்டயாவது வித்துடுறேன்….” என்று பலவாறு திட்டிக் கொண்டே சென்று தூங்கினார்…. அதன் பிறகு கழுதையால் கத்த முடிய வில்லை.

காலை எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த துணிகள், மற்றும் பொருட்கள் எதையும் காணவில்லை! அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தார் முனுசாமி…
வாசலில் கட்டப் பட்டிருந்த கழுதை கண்ணீரோடு நின்று கொண்டிருந்தது…! நாய் இன்னும் எழுந்திரிக்க வில்லை. அருகில் சென்று பார்த்தார், அப்போது தான் நாய் மயங்கிக் கிடக்கிறது என்று அவருக்குப் புரிந்தது. இரவு கழுதை கத்தியதன் அர்த்தம் அவருக்குப் இப்போது புரிந்தது. நாய் குலைத்தால் தான் திருடர்கள் வருவார்கள் என்ற தனது தவறான எண்ணத்தை உணர்ந்த அவர் கழுதையை பாசத்தோடு தடவிக் கொடுக்கத் தொடங்கினார்…!

@nthappaarvai

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!