"கடவுள் துகள்" கண்டுபிடிப்பின் பின்னணியில்…


avatar

பல சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன.

முதலாவது இந்த ஆராய்ச்சி இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல.

சற்று பின்னோக்கிப் பயணிப்போம்:

1950 இல் துகள் முடுக்கி (particle accelerator) கண்டுபிடிக்கப்பட்ட பின் துணை அணு துகள்கள் கண்டுபிடிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படத் துவங்கியது.
1964 பிரிட்டிஷ் பௌதிக வல்லுனர் திரு பீட்டர் ஹிக்ஸ் நிறை (mass) இல்லாத துகள்களுக்கு நிறை கொடுக்கும் ஒரு துகள் இருப்பதாக நினைக்கும் தன் கருத்தை முன் வைக்கிறார். இதுவே பின்னாளில் ஹிக்ஸ்-பாசன் என்று அறியப்பட்டது.
1974 பௌதிக தரநிலை மாதிரி தத்துவம் உருவாக்கப்பட்டது.
2008 CERN என்ற ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம், உலகின் மிகப் பெரிய பௌதிக சோதனைச்சாவடி LHC யை துவக்குகிறது. ஆரம்பித்த 9 நாட்களில் சரியாக செயல்படாமல் போய் சரி செய்யப்படுகிறது.
2009 LHC மறுபடியும் செயல் பட ஆரம்பிக்கிறது.
2012 மார்ச் ப்ரோட்டான்களின் முதல் மோதல் ஏற்படுத்தப்பட்டது.
2012 ஜூலை 4 CERN ஹிக்ஸ் பாசன் கணித்துக் கூறிய அதே நிறையுடன் கூடிய ‘துகளை’ கண்டிபிடித்திருப்பதாக அறிவித்தது.
பீட்டர் ஹிக்ஸ்:

48 வருடங்களுக்கு முன் ஜடப்பொருள்களுக்கு நிறையை (mass) கொடுக்கக் கூடிய துகள் ஒன்று இருக்கக்கூடும் என்று திரு பீட்டர் ஹிக்ஸ் நினைத்தது இன்று நிஜமாகி இருக்கிறது. 83 வயதான இவர் தற்போது எடின்பர்க்கில் வாழ்ந்து வருகிறார். ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு வெளியான அன்று விஞ்ஞானிகளிடையே இவரும் அமர்ந்திருந்தார். ‘என் வாழ்நாளில் இது (ஹிக்ஸ்-பாசன் துகள் கண்டுபிடிப்பு) நடக்கக்கூடும் என்று நான் நினைக்கவே இல்லை’ என்று நெகிழ்ந்து போய் தன் கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்துக்கொண்டார். ‘ஹிக்ஸ்’ என்று தன் பெயரில் இந்தத் துகள் அழைக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. தன்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று அவரே சொல்லிக்கொள்ளுவதால், ‘கடவுள் துகள்’ என்பதையும் அவர் விரும்பவில்லை.

பாசன் யார்?

கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்ட பரபரப்பில் ம(றை)றக்கப்பட்ட இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸ் தான் இந்த பாசன் என்ற பெயருக்கு சொந்தக்காரர்.

1920 களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுடன் சேர்ந்து போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் மற்றும் போஸ்- ஐன்ஸ்டைன் தியரி ஆப் கண்டன்சட் (Theory of Condensate) ஆகியவற்றை வெளிக்கொணர்ந்தவர். இவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் க்வாண்டம் மெக்கானிக்ஸில் குறிப்பிடத் தக்க இவரது பங்களிப்பின் காரணமாக துணை அணுத்துகளுக்கு இவரது பெயரை வைத்தனர்.


ஆனால் விஞ்ஞானத்தின் மகத்தான தருணத்தில் இவர் மறக்கப்பட்டு விட்டார். இதைப்போல நடப்பது இது முதல் முறை அல்ல. பொதுவாகவே இந்திய விஞ்ஞானிகளுக்கு தேவையான அளவு அங்கீகாரம் கிடைப்பதில்லை. திரு போஸ் மிகவும் வெளிப்படையாகப் பேசுவார். அதனாலேயே அவர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் புறக்கணிக்கப்பட்டார். அவர் அமெரிக்காவில் பிறந்திருந்தால் மிகவும் பிரபலம் அடைந்திருப்பார் என்று சில இந்திய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

‘கடவுள் துகள்’ குறித்து பிரபல விஞ்ஞானிகளின் கருத்துக்கள்:

ஹிக்ஸ்-பாசன் துகள் எப்போதுமே கண்டுபிடிக்கப் படாமலேயே இருக்கும் என்று $100 பந்தயம் கட்டிய ஸ்டீபன் ஹாக்கிங் : “முக்கியமான இந்த முடிவு பீட்டர் ஹிக்ஸ்ஸுக்கு நோபல் பரிசை பெற்றுத் தரவேண்டும்.” என்கிறார்.

டேவிட் காமேரான் ,”பாராட்டுகள். இந்த திருப்புமுனை ஆராய்ச்சியாளர் தலைமுறையை ஊக்குவித்து, பிரிட்டன் விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் முன்னிலையில் இருக்குமாறு செய்யட்டும்.”

ரஞ்ஜனி நாராயணன்

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!