காதல் (உருவகக் கதை)


ANTHAPPAARVAI

"காதல்"


"இன்றைய உலகில், இந்தக் காதல் விவகாரம் எப்படிப்பட்டது என்பதை இன்னும் நீ புரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே என்பதை எண்ணித் தான் நான் சிரித்தேன்!" என்று மலரைப் பார்த்து வண்டு சொன்னது!.

பூத்துக் குலுங்கும் மலர்களின் மனம், அந்தத் தோட்டத்தில் எங்கும் பரவிக் கொண்டிருந்த நேரம். அன்றலர்ந்த மலர்களின் பொலிவும் அதை நாடி வரும் வண்டுகளின் மொழியும் மலர்க் கூட்டத்திற்கே மகிழ்ச்சி தரும் நன்னாட்களைப் போல் காட்சியளித்தன…. உதிந்து விட்ட மலர்களைப் பற்றியோ, இனி உதிரவிருக்கும் மலர்களை பற்றியோ கவலைப்படாத மலர்க்கூட்டங்கள், நாடி வரும் வண்டினங்களின் மோக மொழியைக் கேட்டு மெய் மறந்து கிடந்தன…….!

அப்போதுதான் இதழ் விரித்த ஒரு மலர் "நேற்றுவரை அடிக்கடி வந்து பார்த்து விட்டுச் சென்ற காதல் வண்டார், இன்று ஏன் வரவில்லை?" என்று ஏங்கி, சிந்திக்கத் தொடங்கியது.

புதுமலரின் பொலிவைக் கண்டு புன்னகை புரிந்த வண்ணம் அங்கு வந்த காதல் வண்டு, "நான் வரத் தாமதமாகியதால், என் மேல் வருத்தமா என் புது மலரே!" என்று காதலுடன் அதனருகில் நெருங்கியது…

"எவ்வளவு நேரம் காத்திருப்பது! இப்படியா என்னைச் சோதிக்க வேண்டும்?" என்று வருத்தத்துடன் கூறி விட்டு, வண்டாரின் அணைப்பிற்கு இடம் கொடுத்து இன்பத்தில் மூழ்கியது!

"வரும் வழியில் ஒன்றா? இரண்டா? எவ்வளவோ வேலை! அதோடு, எதிர்ப் பட்டதற்கெல்லாம் ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டுமே… இந்த வகையில் என் வருகை தாமதப் படுவது இயற்கைதான். என்றாலும், நீ புதிது என்பதால், புரிந்து கொள்ள நாளாகும்!" என்று வண்டு கூறிவிட்டு, மீண்டும் அந்த இடத்தை விட்டுப் பறந்து சென்றது.

மறுநாள்...

காலை மலர்ந்தது!

உயிரினங்கள் விழித்தெழுந்தன...

நேற்றிருந்த பொலிவு இன்று தனக்கில்லாததை அறிந்த அந்த மலர், "காதலர் வருவாரா? அல்லது வராது கை விட்டு விடுவாரா?" என்ற கவலையில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது, அப்பக்கமாக வந்த அந்த வண்டு, இந்த மலரின் நிலையைப் பார்த்ததும், பார்க்காதது போல் வேறு மலரை நாடிச் சென்றது!

இந்தத் துரோகத்தைக் சகித்துக் கொள்ள முடியாத அந்த மலர், மேலும் சோபை இழந்து, தலையை சாய்த்தவாறு காட்சியளித்துக் கொண்டிருந்தது!

"நாளை வீழ்ந்து விடவிருக்கும், அந்த மலரைக் கடைசியாக ஒருமுறை சந்தித்து, ஏதாவது ஆறுதல் சொல்ல வேண்டும்" என்று எண்ணிய காதல் வண்டு, மீண்டும் அந்த மலரிடம் நெருங்கியது.சோகமே உருவாக நின்ற அந்த மலர், "இது தான் நீ என் மேல் கொண்ட காதலா?" என்று கேட்டது.

இந்த வார்த்தையைக் கேட்ட வண்டு, அதற்காக வருந்தாமல், சிரிக்க ஆரம்பித்தது!

"எதற்காகச் சிரிக்கிறாய்? எனது நிலையைக் கண்டா? அல்லது உன் நிலையைக் கண்டா?" என்று மலர் ஆத்திரமாகக் கேட்டது.

"யார் நிலையைக் கண்டும் நான் சிரிக்க வில்லை! இன்றைய உலகில், இந்தக் காதல் விவகாரம் எப்படிப் பட்டதென்று நீ இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே என்பதை எண்ணித்தான் நான் சிரித்தேன்!" என்று கூறிவிட்டு மலரைப் பார்த்தது.

இந்த வார்த்தையை கேட்ட மலர், மேலும் தன் பொலிவை இழந்துவிட்டது போல் காட்சியளித்தது!

வண்டு, மேலும் அங்கு நிற்பதற்கு விரும்பாததால், "வரட்டுமா என் அப்பாவி மலரே!" என்று கூறிவிட்டு வேறு மலரை நாடிச் சென்றது!

(ஐம்பது வருடங்களுக்கு முன்பும், சில காதல் இப்படித்தான் இருந்திருக்கிறது! மனித வாழ்க்கை எப்போதும் ஒரே மாதரியே இருக்கும் என்பதற்கு, இது போல் எத்தனையோ ஆதாரங்கள்….. எத்தனையோ காலச் சுவடுகள்…..)

-அந்தப்பார்வை.

சிங்கை முகிலன். (“உருவகக் கதைகள்”)

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!