ஜெயலலிதா மனு தள்ளுபடி: பெங்களூர் கோர்ட் உத்தரவு


avatar

தனி நீதிபதி நியமனத்தை எதிர்த்த ஜெயலலிதா மனு தள்ளுபடி: பெங்களூர் கோர்ட் உத்தரவு.

பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும் பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதியின் நியமனத்தை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்தைவிட அதிகமாக ரூ.66 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. ஜெயலலிதா ஆஜராகி நீதிபதி மல்லிகார்ஜுனையா கேட்ட 1350 கேள்விகளுக்கு பதில் அளித்தார். சசிகலா 599 கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இதற்கிடையே, ‘நீதிபதி மல்லிகார்ஜுனையாவின் நியமனம் சட்டப்படி நடக்கவில்லை. எனவே, அவர் இந்த வழக்கை விசாரிப்பது சரியல்ல’ எனக் கூறி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது: சென்னையில் நடந்து வந்த இந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் பெங்களூருக்கு மாற்றம் செய்தது. அதை ஏற்று கர்நாடக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை கூடி ஆலோசித்து தனி நீதிமன்றம், தனி நீதிபதி மற்றும் தனியாக அரசு வழக்கறிஞரை நியமனம் செய்தது. இது தொடர்பாக மாநில அரசின் சார்பில் அதிகாரபூர்வமாக அரசாணை வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தனி நீதிமன்றம் அமைக்கும்போது, மாநில அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பது குற்றவியல் நடைமுறை சட்டம் 3வது பிரிவில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து தனி நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமனம் செய்யும் அதிகாரம் மாநில உயர் நீதிமன்றத்துக்கு உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதில், எந்த சட்ட விதிமீறலும் கிடையாது. இந்த வழக்கின் முழு வரலாற்றை நீதிமன்றம் நன்றாக அறிந்துள்ளது. வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காகதான் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி நியமனம் சட்டப்படி சரியில்லை என்று குற்றவியல் நடைமுறை சட்டம் 3வது பிரிவின் கீழ் மனு செய்துள்ளதை பெரிய விஷயமாக எடுத்து கொள்ள முடியாது. அந்த சட்டப் பிரிவில் என்னென்ன வழி முறைகளை பின்பற்ற வேண்டுமோ, அவை அனைத்தையும் கர்நாடக உயர் நீதிமன்றம் சரியாக பின்பற்றியுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. ஆகவே, நீதிபதி நியமனம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த நான்கு மனுவையும் தள்ளுபடி செய்கிறேன். மேலும், எனக்கு முன் நீதிபதியாக இருந்த மனோலியை நியமனம் செய்தபோது, அரசாணை வெளியிடப்பட்டதாகவும், நான் நியமனம் செய்யப்பட்டபோது அரசாணை வெளியிடப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நேற்று தாக்கல் செய்த புதிய மனுவையும் தள்ளுப்படி செய்கிறேன். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா கூறியுள்ளார். இதையடுத்து, ‘‘இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், இந்த நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்று சசிகலாவின் வக்கீல் மணிசங்கர் கூறினார். அதற்கு அரசு துணை வக்கீல் சந்தேஷ் சவுட்டா எதிர்ப்பு தெரிவித்தார். ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் விசாரணை நடக்க வேண்டும். ஆகவே, தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும். எதிர்தரப்பில் வழக்கை தாமதப்படுத்த அடிக்கடி மனு போடுவதை தவிர்க்க உத்தரவிட வேண்டும்’’ என்றார். இதை தொடர்ந்து, மணிசங்கரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, ‘‘விசாரணை 24ம் தேதி நடக்கும். அன்றைய தினம், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும்’’ என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

‘இழுத்தடிக்கும் முயற்சி இனியும் வேண்டாம்’

தீர்ப்புக்கு பிறகு, அரசு துணை வக்கீல் சந்தேஷ் சவுட்டா அளித்த பேட்டி: சொத்து குவிப்பு வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பெங்களூர் தனி நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு ஆவணங்கள் மொழி மாற்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழில் சொல்வதை மொழி மாற்றம் செய்ய மொழி பெயர்ப்பாளர் நியமனம் என்பது உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் கேட்ட பல சலுகைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. வழக்கை தினமும் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், கர்நாடக உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. இருப்பினும், ஒவ்வொரு முறையும் புதிய மனுவை தாக்கல் செய்து விசாரணையை இழுத்தடிக்கும் முயற்சியை அவர்கள் செய்கின்றனர். தற்போது, நீதிபதி நியமனத்தை எதிர்த்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே வழக்கின் தன்மையை புரிந்து கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு சவுட்டா கூறினார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!