வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி


avatar

வேலையல்ல அது எனக்கு அது வேள்வி: சொல்கிறார் காயத்ரி Tamil_News_large_511971
அது சென்னையில் உள்ள ஒரு பிரம்மாண்டமான கல்யாண மண்டபம். கல்யாணக்களை மண்டபம் முழுவதும் நிறைந்து இருந்தது. அதிகாலை 6 மணிக்கு பெண் மண்டபத்திற்குள் வரும்போது ஒன்பது கெஜ மடிசார் புடவை அணிந்த மங்களகரமான தோற்றத்துடன் சில பெண்கள், மணப்பெண்ணை வாய் நிறைய வரவேற்று அழைத்துச் சென்றனர். இதேபோல மாப்பிள்ளை வீட்டாரையும் முகம் முழுவதும் புன்னகை காட்டி அழைத்துச் சென்றனர்


அப்போதே ஆரம்பித்து திருமணம் முடியும் வரை அவர்கள் அங்குமிங்கும் ஓடி, ஓடி அனைவரையும் உபசரித்ததுடன் நிற்காமல், அனைவருக்கும் காபி, டீ மற்றும் பல்வேறு வித குளிர்பானம் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்தனர். யார் இந்த மாமிகள் பெண் வீடா, மாப்பிள்ளை வீடா என்று கேட்காதவர்கள் குறைவு. ஆனால் இவர்கள் பெண் வீட்டைச் சேர்ந்தவர்களும் கிடையாது; மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்களும் கிடையாது.

பிறகு யார் என்கிறீர்களா? திருமணவீட்டில் சேவை செய்ய நியமனம் செய்யப்பட்டவர்களே இவர்கள். வேலையை வேலையாக செய்யாமல் ஒரு வேள்வி போல செய்யும் இவர்கள் யார்? என்பதை அறியும் ஆர்வம் ஏற்பட்டது. இவர்களில் ஒருவரானவரும் தலைவியுமான காயத்ரி என்பவரிடம் பேச்சு கொடுத்தோம். நிறைய சுவராசியமான விஷயங்களை சொன்னார்.

கும்பகோணத்தில் பிறந்த காயத்ரிக்கு தன் வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் வரும் என்று அவரே எதிர்பார்த்தது இல்லை. பாங்கில் வேலை பார்க்கும் கணவர் நீலகண்டன், குழந்தைகள் ஸ்ரீராம், அபிநயா என குடும்பம் அமைதியாகத்தான் சென்று கொண்டு இருந்தது. அசாதாரண சூழ்நிலையில் கணவர் பாங்க் வேலையை விட்டுவிட செய்வதறியாத சூழ்நிலையில் சென்னைக்கு ரயிலேறினார்.

வாழ்க்கையில் ஜெயிக்கவேண்டும், பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருந்தவருக்கு எப்படி அடியெடுத்து வைப்பது என்பதில் குழப்பம் இருந்தது. அப்போதுதான் அவரது மாமனார் ராமய்யர் கற்றுக் கொடுத்த பல்வேறு வித சமையல் கைகொடுத்தது. அவர் குடியிருக்கும் பம்மல் பகுதியில் உறவினர் உதவியோடு சமையல் வேலைக்கு சென்றார்.

இது நடந்து பல ஆண்டுகளாகிவிட்டது, இப்போது இவரது வாடிக்கையாளர்கள் பலரே இவரது உறவினர்கள் போலாகிவிட்டனர். ஒருவர் இவரது சமையல் ருசி காரணமாக இவரை இங்கிலாந்திற்கே பலமுறை அழைத்துச் சென்றுள்ளார். பிராமணர்கள் வீட்டில் நடக்கும் சிறிய அளவிலான விழாவிற்கு சமைத்துக் கொடுப்பது என்பது இவரது பிரதான தொழில். பெரியவீட்டில் நடக்கும் கல்யாணங்களில் சேவை செய்ய செல்வது இவரது உபதொழில். அவர்களது தேவைக்கு ஏற்ப ஆட்களை அழைத்துச் செல்வார்.

காலையில் 4 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இரவு 10 மணியானாலும் தொடரும், ஆனாலும் காயத்ரி தொய்வடைவதில்லை, காரணம் எந்த லட்சியத்துடன் சென்னைக்கு வந்தாரோ அந்த லட்சியம் நிறைவேறிக்கொண்டு இருப்பதானால். மகன் பொறியாளராகி வேலைக்கு செல்கிறார், மகள் பொறியாளர் படிப்பு முடிக்க போகிறார்.

நிறைய உழைச்சாச்சு நான்தான் சம்பாதிக்கிறேனே கொஞ்சம் ஒய்வு எடுக்கலாமே என்ற மகனின் ஆதங்கத்திற்கு காயத்ரியின் பதில், " நான் எப்போதுமே பணத்திற்காக வேலைக்கு சென்றதில்லை, வாழ்க்கையின் சந்தோஷமே மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில்தானே இருக்கிறது, அந்த வகையில் எனது சமையல் கலையாலும், கல்யாண சேவையாலும் பலரை சந்தோஷப்படுத்த முடியறது, பகவான் விருப்பப்படுறவரை உழைப்போமே' 'என்கிறார் ஒரு சின்ன சிரிப்புடன்.

- எல்.முருகராஜ்

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!