காப்பியடிப்பது தான் கலையின் ஆரம்பம்!


ANTHAPPAARVAI

Shakthi wrote:புரிகிறது ஆனால், 1125 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் இருந்த நமது தளம் மீண்டும் ஆறாவது இடத்திற்கே சென்று விட்டது கவனித்தீர்களா?

காரணம் காப்பி & பேஸ்ட் செய்யாதது தான்!!
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!

கலையின் ஆரம்பமே காப்பியடிப்பது தான். ஏனென்றால் எனக்குத் தெரிந்தவரை கலையில் ஆரம்பம் ஓவியத்திலிருந்து தான் தொடங்கியதாக நினைக்கின்றேன். அப்படிப் பார்த்தால் ஓவியம் என்பதே காப்பியடிப்பது தானே?

என்னைப் பொறுத்தவரையில், நமது தளம் எந்த இடத்தில் இருக்கிறது என்பது முக்கியமில்லை. நமது தளத்தில் என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம்!

நமது தளம் தகவல்களை சேகரிக்கும் தளமாக இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதை விக்கிபீடியா மிகவும் செம்மையாக செய்து வருகிறது. அதைப்போல வரவேண்டும் என்பதற்காக மற்ற தளங்களில் இருக்கும் தகவல்களை எல்லாம் காப்பி செய்து தனது தளத்தில் போட்டுக் கொண்டு, "தமிழில் எதைத் தேடினாலும் நமது தளத்திற்கு வருகிறது" என்று மார்தட்டிக் கொள்ளும் மடமையிலும் எனக்கு உடன்பாடு இல்லை!

காப்பி பேஸ்ட் செய்வதை நான் முற்றிலும் தடுக்கவில்லை. அதற்கு முன்னால், அந்தப் பதிவுகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை படித்துவிட்டு பிறகு காப்பி பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அதோடு முழுமையாக பதிவுகளை காப்பி செய்து வந்து இங்கு போடவேண்டாம். அந்தப் பதிவைப் பற்றி குறைந்தது இரண்டு வாக்கியங்களிலாவது கருத்தை கூறலாமே. அவ்வாறு மற்றவரைப் பெருமைப் படுத்துவதை விரும்பாதவர்கள் எதற்காக மற்றவர்களின் பதிவுகளை மட்டும் காப்பி செய்து கொள்ளவேண்டும்?

ஒருவருடைய கருத்து நமக்குப் பிடித்திருந்தால், அதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவது தான் அறிவின் அடையாளம். அவ்வாறு செய்யும் போது அந்த நபருடைய ஆக்கங்களைப் பற்றி ஒரு விமர்சனமாக பதிவு செய்துவிட்டு, சம்மந்தப் பட்ட பதிவுக்கான URL LINK -ஐ மட்டும் இணைக்கலாம் அல்லவா? ஆனால், சிலர் அவ்வாறு செய்வதை விரும்புவதில்லை. இதற்காக தாங்களே பல பயனர் பெயர்களை உருவாக்கிக் கொண்டு யாரோ செய்வதைப் போல இந்த முட்டாள்தனத்தை செய்து கொண்டிருக்கின்றனர்.

மற்றவர்களின் கருத்துக்கள் மற்றும் படைப்புக்களை எடுத்துக்கையாள்வது என்பது "முழுவதுமாக காப்பி செய்து கொள்வதில்லை" என்பதை அனைவரும் உணர வேண்டும். ஒருவருடைய கருத்தின் தாக்கமாக அதைப் போலவே கருத்துக்களை நாமும் நமது அறிவின் அடையாளமாக வெளிப்படுத்தலாம். இதன் மூலம் தான் ஒரு செய்தியின் அல்லது கற்பனையின் சாராம்சம் பிரபலமடைய முடியும்.

எனவே எடுத்துக் கையாள்வதை நான் தவறாகக் கருத மாட்டேன். ஆனால் ஒருவரின் படைப்பை எடுத்துக் கையாள்வது என்றால் என்ன? ஒரு சிறந்த செய்தியை அல்லது கருத்தை ஒருவர் வெளியிடுகின்றார். பொதுவில் வெளியிட்டுவிட்டாலே அது அனைவருக்கும் சொந்தமாகி விடுகிறது.(ரசிப்பதற்கு அல்லது விமர்சிப்பதற்கு) அப்படி அனைவருக்கும் சொந்தமாகிப் போனதை எடுத்துக் கையாள்வதும் அனைவருக்கும் சொந்தம் தான். திருவள்ளுவரின் திருக்குறளை கவிச்சக்கரவர்த்தி கம்பனே எடுத்துக் கையாண்டிருக்கின்றான். ஆனால், கையாள்வது என்பது வேறு, காப்பியடிப்பது என்பது வேறு.

மற்றவர்களின் படைப்புக்களை கையாளும் போது, எழுதியவர்களின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.(இது சொந்தமான சிந்தனைத் திறன் உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியும்) அதோடு ஒரே மாதரியான சிந்தனை பலருக்கும் வர வாய்ப்பிருப்பதாகவும் உளவியல் கூறுகிறது! இந்த உளவியல் கருத்தை வைத்துக் கொண்டு, பலரும் காப்பியடிப்பதை நியாயப்படுத்த முயலுகிறார்கள். ஆனால், பலருக்கு தோன்றிய ஒரே சிந்தனை, முதலில் யாரால் வெளியிடப்படுகிறதோ அந்த முதலாமவருக்கே அது சொந்தமாகி விடுகிறது என்பது மக்கள் கருத்து. ஆனால், உளவியல் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பலரும் மக்கள் கருத்தை ஏற்றுக் கொள்வதில்லை.

சங்க இலக்கியத்தில் ஒரு காட்சி வரும், (நற்றிணையில் என்று நினைக்கிறேன்) அதாவது வறுமையில் இருக்கும் புலவன் ஒருவன் தனது நாட்டின் மன்னன் போருக்குப் புறப்படும் வேளையில் "வெற்றி உனக்கே வந்து சேரும்..." என்று மன்னனை புகழ்ந்து பாடல் பாடுகிறான். அதனால் பூரித்துப் போன மன்னன் தன்னிடம் உள்ள பொன், பொருள் என்று நிறைய பொருள்களை அந்த புலவனுக்கு பரிசாகக் கொடுக்கின்றான். அந்தப் புலவனோ, பரிசுப் பொருள்களை எல்லாம் கொண்டுவந்து தனது மனைவியிடம் கொடுக்கின்றான். வறுமையில் இருந்த அவனது மனைவி அந்த நகைகளை எல்லாம் பார்த்ததே இல்லை. எனவே முதன் முதலில் அவற்றைப் பார்த்த மனைவி அந்த நகைகளை தனது உடம்பில் அணிந்து கொள்கின்றாள். ஆனால், கழுத்தில் அணியும் நகைகளை இடுப்பிலும், மூக்கில் அணியும் மூக்குத்தியை காதிலுமாக தவறாக அணிந்து கொள்கிறாள்...

இதே போன்ற ஒரு காட்சி கம்பராமாயணத்திலும் இடம் பெற்றிருக்கின்றது...
அதாவது, ராவணனால் சிறையெடுத்து செல்லப்பட்ட சீதை தான் செல்லும் வழியை தனது கணவனுக்கும், லட்சுமணனுக்கும் அடையாளம் காட்டுவதற்காக அந்த வழி எல்லாம் தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாக கீழே போட்டுக் கொண்டே செல்கிறாள். அதே போன்று அனுமன் தனது வானரக் கூட்டங்களோடு சீதையைத் தேடிச்செல்லும் போது வழியில் கிடக்கும் நகைகளை அந்த வானரங்கள் தங்களது உடம்பில் அணிந்து கொள்ளுகின்றன. அதுவும் அந்தப் புலவன் மனைவியைப் போன்றே காதில் அணிவதை மூக்கிலும், இடுப்பில் அணிய வேண்டியதை கழுத்திலும் அணிந்து கொள்ளுகின்றன....

இந்த இரண்டு காட்சிகளும் ஒன்று தான் ஆனால், இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் உணர்வு இரண்டு. அதாவது புலவன் மனைவி அணிந்து கொண்டிருக்கும் போது அவர்களின் வறுமையும், குரங்குகள் அணிந்திருக்கும் போது நகைச்சுவையும், சீதையைக் காணாமல் தவித்த ராமனுக்கு ஒரு அறுதல் கிடைத்ததையும் உணர முடிகிறது. இந்த இடத்தில் கம்பன் காப்பியடிக்கவில்லை, எடுத்துக் கையாண்டிருக்கின்றான். அதனால் தான் உணர்வு வேறுபட்டிருக்கிறது. நாம் அனைவரும் கம்பனைப் போலவே எடுத்துக் கையாள்வோம். கயவர்களைப் போல காப்பியடிக்க வேண்டாம்.

காப்பியடிப்பவர்கள் அதை நியாயப்படுத்த கூறும் காரணம் விக்கிபீடியா. ஆனால் அவ்வாறு ஒப்பிடுவதற்கான தகுதி நமக்கிருக்கிறதா என்பதை முதலில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஏனென்றால், விக்கிபீடியாவில் கைதட்டல்களை நான் பார்த்ததில்லை! அரட்டைகளையும் பார்த்ததில்லை!

ஒரு திரைப்படத்தில் வேற்று மொழிப்படத்தின் சாயல் இருந்து விட்டால் உடனே அங்கிருந்து காப்பியடித்து விட்டார்கள் என்று தாறுமாறாக விமர்சனம் எழுதத் தெரியும் பலருக்கு, அது அனுமதி பெறப்பட்ட மொழிமாற்றுப் படம் என்பது தெரிந்துருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுக்கு சினிமா தெரியாது என்பது தான் உண்மை.

நீ ஏன் எதற்கெடுத்தாலும் சினிமாவிற்கு வக்காலத்து வாங்குகிறாய்? நீ தான் சினிமாவை உருவாக்கினாயா? அல்லது இதுவரை நீ எத்தனை திரைப்படங்கள் எடுத்திருக்கிறாய்? என்று பல முட்டாள் தனமான கேள்விகளை சிலர் கேட்கலாம். ஆனால், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஓட்டுப்போட மட்டுமே உரிமை உள்ள பலரும் அரசியலைப் பற்றிப் பேசும் போது... செய்தித் தாளிலும், தொலைக்காட்சியிலும் மட்டுமே பார்த்து வரும் தங்களது அரசியல் தனைவனுக்காக சிலர் வக்காலத்து வாங்கும் போது... நான் சினிமாவிற்காக வக்காலத்து வாங்குவதற்கான முழுத்தகுதியும் எனக்கு இருக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்றவர்களின் படைப்புக்களை காப்பியடிப்பவர்கள், அதன் மூலம் தான் பிரபலமடைய வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறார்கள். அதே நேரத்தில் அந்தப் படைப்பை எழுதியவர், தானே வந்து அதை பதிவு செய்தால் "ஏன் இப்படி வீணான விளம்பரம் தேடுகிறீர்கள்" என்று அவர்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். அதாவது அடுத்தவன் மனைவி மீது இவர்கள் ஆசைப்படலாம், ஆனால் கட்டிய கணவன் ஆசைப்படுவதை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை!

எனவே, தனது தளத்தை எத்தனை பேர் பார்வையிடுகிறார்கள், எத்தனை உறுப்பினர்கள் இணைகிறார்கள், எந்தனைபேர் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை தினமும் கவனிக்கும் செயல் ஒருவகை மனோவியாதி என்று குறிப்பிடுகிறது மனோதத்துவம்!

எத்தனை பேர் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பது இன்றைய அளவில் பெருமையாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் நமது தளத்தைப் பார்வையிடுகிறவர்கள் "காரித் துப்புவதற்கு" இடம் கொடுப்பதாக அமைந்து விடக்கூடாது என்பது தான் எனது கவலை!

மேலும் நான் இந்தத் தளத்தை உருவாக்கியது என்பது ஒரு விபத்து! எனக்கு இது முழு நேர வேலையாக இருந்தால் இதை இன்னும் சிறப்பாக கொண்டு செல்ல முடியும்! ஆனால், இப்போது எனக்கு இது வேலையில்லை. இன்னும் முடிக்க வேண்டிய, தொடங்க வேண்டிய ஆக்கப்பூர்வமான நிறைய வேலைகள் இருக்கிறது. அதற்கே எனக்கு நேரம் போதவில்லை. இதில் யாரெல்லாம் ஆன்லைனில் வருகிறார்கள், எதையெல்லாம் படிக்கிறார்கள், என்பதைக் கவனிப்பதற்கு நேரமில்லை. அது எனக்குத் தேவையும் இல்லை!

தமிழகத்தில் அதிக நேரம் இணையத்தில் இருப்பவர்களின் பட்டியல் தயாரித்தால் அதில் நான் முதலிடத்தில் வருவேன் என்று நினைக்கின்றேன். அதாவது மின்சாரம் தடைபடும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் எனது இணைப்பு செயல்பட்டுக் கொண்டே இருக்கும். (பாவம் எனக்கு இணையம் வழங்கும் நிறுவனம். ஆனாலும் அவர்களின் சேவை இதுவரை சிறப்பாகவே இருக்கிறது.)

நான் நினைத்தால் மாதத்தில் பல லட்சம் பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் சொன்ன ஆறாவது இடத்தில் இருந்து முதலிடத்திற்கே கூட கொண்டு செல்ல முடியும். ஆனால் அதனால் என்ன பயன்?...........

எனவே நண்பர்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமானால் இதேபோல தளம் அமைப்பது எப்படி என்பதை கூறுகிறேன். அதன் மூலம் நீங்கள் தாராளமாக உங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

இறுதியாக நமது தளத்தில் வீணான அரட்டைகளும், வெறும் கை தட்டல்களும் கண்டிப்பாக இருக்க வேண்டாம். எதிர் வரும் சந்ததிகள் நம்மைப் பார்த்து ஏளனமாக சிரிக்க வழி வகுக்க வேண்டாம்!

சில தளங்களில் Right Clik மற்றும் Ctrl+C ஆகிய வசதிகளை செயலிழக்கச் செய்திருக்கும் நிலையைப் பார்க்கும் போது, அவர்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. கிட்டத்தட்ட ஒரு "ஆண்டி வைரஸ்" தடுப்பைப் போலவே இது அமைந்திருக்கிறது. அதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சி ஒரு படைப்பை எழுதுவதை விட அதிகமானது என்பதையும் அறிய முடிகிறது!

இது கனெக்ட் செய்யும் இடமல்ல. கற்பனை செய்யும் இடம்.

அன்புடன்,
அந்தப்பார்வை.

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

avatar

நல்ல கருத்துக்கள்.

இந்தத் தகவல் பலருக்குப் பாடம் புகுட்டுவதாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்புப் பகுதியில் இருந்து பொது கட்டுரைகள் பகுதிக்கு மாற்றுகிறேன். தவறிருந்தால் மீண்டும் சிறப்புப் பகுதிக்கே கொண்டு சென்று விடலாம். Very Happy

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

Priya Dharsani

Shakthi wrote:நல்ல கருத்துக்கள்.

இந்தத் தகவல் பலருக்குப் பாடம் புகுட்டுவதாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறப்புப் பகுதியில் இருந்து பொது கட்டுரைகள் பகுதிக்கு மாற்றுகிறேன். தவறிருந்தால் மீண்டும் சிறப்புப் பகுதிக்கே கொண்டு சென்று விடலாம். Very Happy

மாற்ற வேண்டியதில்லை இங்கேயே இருக்கட்டும். நண்பன்னா நீங்க தான் உண்மையான நண்பன். பாராட்டுக்கள்.

LIKE0DISLIKE0

I Like this post.

I Report this post.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!